ஐதராபாத்: ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த புஜாரா ( இரட்டை சதம் ) ஜடேஜா ( 3 விக்கெட் ) , அஸ்வின் (5 விக்கெட்) வீழ்த்தி பெரும் துணையாக இருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தவிர, டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆஸி.,க்கு மீண்டும் அடி :
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237/9 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்:
நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா "சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அஷ்வின் அபாரம்:
பின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா "ரன் அவுட்'டாக்கினார். வேட் (10), மேக்ஸ்வெல் (8) ஆகியோரை அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த பட்டின்சனும் (0) அஷ்வினிடம் சரணடைய, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது சிறந்த வெற்றி:
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றது. தவிர, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி "நம்பர்-1' :
இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி), பின்னுக்கு தள்ளி தோனி (45 டெஸ்ட், 22 வெற்றி) முதலிடம் பிடித்தார்.
மோசமான ஸ்கோர் :
இரண்டாவது இன்னிங்சில் 131 ரன்களுக்கு "ஆல் அவுட்டான' ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக தனது, 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு "ஆல் அவுட்டானது'.
tags:இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்,ஆஸ்திரேலிய அணி,
Post a Comment