சென்னை: ""அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணிவிழா மலரை, கருணாநிதி நேற்று வெளியிட்டார். அவரது பேட்டி:இலங்கைப் பிரச்னையில், தி.மு.க.,வின் கோரிக்கையை பலமுறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, மத்திய அரசு செயல்படும் என, நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.டில்லியில் 7ம் தேதி நடைபெறும், "டெசோ' கருத்தரங்கத்தில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கிறோம்.இலங்கை செயலைக் கண்டிக்கும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென, நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்.இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொலிப்பதாக அமையும். இந்தத் தீர்மானத்தின் மீது, இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை, தமிழக மக்கள் அக்கறையோடு கவனிக்கின்றனர்; நாங்களும் தான்.மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதற்கு, பல சான்றுகளையே ஏற்கனவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக, நல்ல காரியங்களை விட்டு விட முடியாது. அளவுக்கு மீறி மது பழக்கத்தையும், அதைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டுமா? என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
tags:dr kalaigner, sri lanka,
Post a Comment