தமிழகம் முழுவதும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, யாருக்கும் பயனின்றி வீணாகிறது.
தமிழகத்தில், 12,500 வருவாய் கிராமங்கள் உள்ளன. 1981ம் ஆண்டு, ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், ஒரு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது, 9,000 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கிராம நிர்வாக அலுவலர்களுக்காக, வருவாய் கிராமத்தில், வளர்ச்சி திட்டப்பணி மூலம், அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கிராம கணக்குகளை பாதுகாக்கவும், பொதுமக்கள் வந்து செல்லவும், அரசு திட்டங்களை செயல்படுத்தவும், அலுவலகம் பயனுள்ளதாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக, கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ்:
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான, ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு, இறப்பு, சொத்து மதிப்பு போன்ற சான்றிதழ்களைப் பெறவும், உட்பிரிவு பட்டா, பட்டா பெயர் மாற்றம், சிட்டா, கணிணி பட்டா ஆகியவற்றை பெற, கிராம நிர்வாக அலுவலர்களை அணுக வேண்டியுள்ளது. அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், வட்டாட்சியர் அலுவலகத்தில், சானறிதழ்கள் வழங்கப்படும். எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள், தினமும் கிராமத்திற்கு செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர், கிராமங்களில் புலதணிக்கை செய்யும் போது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், கிராம கணக்குகளுடன் செல்ல வேண்டும். தேவைப்படும் போது, கணக்குகளை உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும். எனவே, அடிக்கடி ஆவணங்களை வெளியில் எடுத்து செல்லுவதும், திரும்ப கொண்டு வருவதும் சிரமமாக இருந்தது.
மடிக்கணினி விநியோகம்:
இப்பிரச்னைக்கு தீர்வுகாண, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அரசு மடிக்கணினி வழங்கியது. அத்துடன், பிரின்டரும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மடிக்கணினி பயன்பாடு குறித்து, பயிற்சியும் அளிக்கப்பட்டது. மடிக்கணினி வழங்கப்பட்டு ஓராண்டாகியும், கிராம கணக்குகள் குறித்த விபரம் இதுவரை, மடிக்கணினியில் பதிவு செய்யப்படவில்லை; "நெட்ஒர்க்' இணைப்பும் வழங்கப்படவில்லை. இதனால், கிராம நிர்வாக அலுவலர்கள், மடிக்கணினி இருந்தும், பழைய கணக்குகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது: மடிக்கணிணி மற்றும் பிரின்டர் கொடுத்த வருவாய் துறையினர், பயன்பாடு குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள், எந்த ஆவணத்தையும், வட்டாட்சியருக்கு, ஆன்லைன் மூலம் நேரடையாக தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தவில்லை; வருவாய் ஆய்வாளர் மூலமாகத் தான் தெரிவிக்க வேண்டி உள்ளது. ஆனால், வருவாய் ஆய்வாளருக்கு மடிக்கணிணி வழங்கவில்லை; இதனால், மடிக்கணினி பயனில்லாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment