FLASH NEWS :
Home » » மிடில் ஆர்டரில் வருவாரா சேவக்: டிராவிட் புது ஆலோசனை

மிடில் ஆர்டரில் வருவாரா சேவக்: டிராவிட் புது ஆலோசனை

சேவக்,கேப்டன் டிராவிட்,புதுடில்லி, டெஸ்ட்
புதுடில்லி: துவக்க வீரராக சொதப்பும் சேவக் குறித்து அணி நிர்வாகம் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இவரை "மிடில் ஆர்டரில்' களமிறக்கலாம்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் ஆலோசனை தெரிவித்தார்.
சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் "சீனியர்' துவக்க வீரர் சேவக், 34. இவர், கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இதுகுறித்து டிராவிட் கூறியது:
சேவக் போன்ற வீரர் ஒரு அணிக்கு கிடைப்பது பெரிய சொத்து போன்றது. இவர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை முன்பு வெளிப்படுத்தினார். ஆனால், சமீபகாலமாக தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 2, 3 ஆண்டுகளாக அன்னிய மண்ணில் பலமுறை அணியை கைவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், இந்திய அணி அடுத்து வரும் டிசம்பரில் தான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா செல்கிறது. இத்தொடரில் சேவக்கை தான் துவக்க வீரராக களமிறக்கப் போகின்றார்களா என, பி.சி.சி.ஐ., உடனே முடிவு செய்ய வேண்டும்.
அப்படியெனில், மீதமுள்ள போட்டிக்கு சேவக்கை துவக்க வீரராக தொடர்ந்து விளையாடச் செய்து அவரது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், சேவக்கை "மிடில் ஆர்டரில்' களமிறக்கலாம்.
சச்சின் விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ள நிலையில், அனுபவ வீரரான சேவக் வருகை "மிடில் ஆர்டருக்கு' பலம் சேர்க்கும். ஏனெனில், இதற்கு முன் அவர் இந்த இடத்தில் விளையாடி உள்ளார். இது தான் தனக்கு பிடித்த இடம் என்றும், சேவக் பலமுறை கூறியுள்ளார்.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் துவக்கத்தில் புதிய இளம் வீரர் அணிக்கு வரலாம். நன்கு அறிமுகமான இந்திய ஆடுகளத்தில், இளம் வீரருக்கு இப்போதே வாய்ப்பு தந்து சோதிக்க வேண்டும். அப்போது தான் தென் ஆப்ரிக்க தொடரில் வேகப்பந்து வீச்சில் தாக்குப்பிடித்து களத்தில் நிற்க முடியும்.
அதை விட்டுவிட்டு, நேரடியாக தென் ஆப்ரிக்க சென்று, ஸ்டைன், மார்னே மார்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக களமிறக்குவது அழகல்ல.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
இன்று இந்திய அணி தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. முதல் இரு டெஸ்டில் வெற்றி பெற்றதால், அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. இதனால், சேவக் அணியில் தொடரலாம்.


tags: சேவக்,கேப்டன் டிராவிட்,புதுடில்லி, டெஸ்ட்
Share this article :

Post a Comment

 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger