ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் மீது, நாளை ஓட்டெடுப்பு நடக்கிறது.
இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.
இதற்கிடையே, இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, கல்லம் மக்ரே என்பவர் தயாரித்துள்ள, "நோ பயர் சோன்' என்ற ஆவணப்படம், மனித உரிமை ஆணையத்தில், திரையிடப்பட்டது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. "இலங்கையில், நடந்த போர் குற்றங்கள் குறித்து, சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடக்கிறது. விவாதத்தின் அடிப்படையில், சில சீர்திருத்தங்களுடன் இறுதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, நாளை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
தீர்மானத்தின் அம்சங்கள்: நல்லிணக்க குழுவின் பல பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது கவலையளிக்கிறது. இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்டோர் காணாமல் போவது குறித்தும், சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை. அதிகார பரவலாக்கத்துக்கு ஒப்புதல் அளித்த இலங்கை அரசு, தற்போது அதை செயல்படுத்த முடியாது என, மறுத்துள்ளது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறிப்பாக - ஆட்கள் காணாமல் போவது, கடத்தி கொலை செய்யப்படுவது, சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக, விசாரிக்க, அங்கு செல்லும் ஐ.நா., பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை அமைப்பினருக்கும், இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தத்தில், "பெண்கள் மீதான கொடுமைகள் பற்றியும் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும்' என்பது சேர்க்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் உள்ளிட்டவை தொடர்பாக, இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, ஐ.நா., மனித உரிமை குழுவின் ஆணையர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் அக்குழுவின், 25வது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, முதல் மற்றும் இரண்டாவது முறை திருத்தப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது திருத்தத்தில், இது குறித்த இடைக்கால அறிக்கையை, "வரும் செப்டம்பர் மாதம் நடக்கும், 24வது, கூட்டத்திலேயே, சமர்ப்பிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்துள்ளன
tags;இலங்கை; எதிரான தீர்மானத்தின் மீது நாளை ஓட்டெடுப்பு
Post a Comment