சென்னை: "சர்வதேச அளவில், தனக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்க, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தின் கேடியக்கரை பகுதியில், நாகபட்டனம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த, 14 மீனவர்கள், இரண்டு மோட்டார் படகுகளில், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது, இலங்கை கடற்படை, கடந்த, 6ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில், காரைக்காலை சேர்ந்த மீனவர் செண்பகம் காயம் அடைந்தார். இவரை, உடன் சென்ற மீனவர்கள், நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இலங்கை கடற்படையினர், அப்பாவி தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன், தூத்துக்குடி மீனவர்கள், 16 பேரை பிடித்துச் சென்று, கோர்ட் காவலில் வைத்துள்ளனர். அமைதியான முறையில் வாழ்வாதரத்தைத் தேடும், தமிழக மீனவர்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற் காக, இலங்கை கடற்படை, இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய, நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச விசாரணை வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள், இந்திய பார்லிமென்டில் வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அரசு தாக்குதல் நடத்தியுள்ளதில், பின்னணி இருப்பதாக கருதப்படுகிறது. ஈழத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு, சர்வதேச அளவிலான விசாரணையை, இந்திய அரசு கேட்கக் கூடாது என்று எச்சரிப்பதற்காக, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாகவே தெரிகிறது. இலங்கையின் இப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்னையில், மத்திய அரசு மவுன பார்வையாளராக இருக்கக் கூடாது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை, ராணுவத்தின் மூலம் பறிப்பதை நிறுத்த வேண்டும் என, இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்; உறுதியான நடவடிக்கை, உடனடியாகத் தேவை. இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.
tags:சென்னை,தமிழக மீனவர்கள்,முதல்வர் ஜெயலலிதா
Post a Comment