புதுடில்லி: ""கூடங்குளம் அணு மின் நிலையத்தில், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, மின் உற்பத்தி துவங்கும்,'' என, மத்திய அமைச்சர், நாராயணசாமி கூறினார்.
லோக்சபாவில் நேற்று, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர், நாராயணசாமி, எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: தமிழகத்தின், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின், முதல் மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் செயல்படத் தயார் நிலையில் உள்ளன. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம், முழு அளவிலான பரிசோதனைகளை நடத்தி, முதல் யூனிட் செயல்படுவதற்கு, ஜனவரி, 24ம் தேதி ஒப்புதல் அளித்தது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளுடன், இந்திய அணுசக்தி கழக லிட்., அதிகாரிகள் இணைந்து, ஒருங்கிணைந்த பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். இந்த குழுவினர், இதற்காக, ஒன்றரை மாதமாக முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் யூனிட், வரும், ஏப்ரல் மாதத்திலிருந்து மின் உற்பத்தியை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது யூனிட், வரும் அக்டோபரில் மின் உற்பத்தியை துவங்கும். இந்த இரண்டு யூனிட்டுகளிலும், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவற்றில், 925 மெகாவாட் மின்சாரம், தமிழகத்துக்கும், 266 மெகாவாட் மின்சாரம், கேரளாவுக்கும், 442 மெகாவாட் மின்சாரம், கர்நாடகாவுக்கும் வழங்கப்படும். புதுச்சேரிக்கு, 67 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்துக்கு, கூடுதலாக, 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கடலோர பகுதிகளில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களில், அதி நவீன தொழில்நுட்பத்துடன், அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நில நடுக்கம், சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால், அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு செய்வர். இந்த ஆய்வு, சர்வதேச தரத்திலானதாக இருக்கும். பாதுகாப்புக்கு தேவையான அனைத்து விஷயங்களையும், பலப்படுத்தவும், செயல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாராயணசாமி அளித்த பதிலில் கூறப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள், கடந்த டிசம்பரில் ஆய்வு நடத்தினர். மின் நிலையத்தில் உள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில கருவிகளில், சிறிய அளவிலான கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. "பிப்ரவரியில் மின் உற்பத்தி துவங்கும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பிரச்னை காரணமாக, திட்டமிட்டபடி, மின் உற்பத்தியை துவங்க முடியவில்லை. தற்போது, "ஏப்ரல் மாதம் முதல், மின் உற்பத்தி துவங்கும்' என, முறைப்படி, லோக்சபாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
tags:கூடங்குளம் ,அணு மின் ,புதுடில்லி:
+ comments + 1 comment
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தாமதம்
http://tamilflashnews.blogspot.in/2013/03/blog-post_5140.html#comment-form
Post a Comment